ரூ 3,00,00,000 அமைச்சர்கள் டீ குடிக்க செலவு……எம்.எல்.ஏ பரபரப்பு குற்றசாட்டு…!!
அமைச்சர்களின் அலுவலக டீ செலவு ரூ.3 கோடியா? என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி முதல்–அமைச்சராக நாராயணசாமி பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி காரணமாக மக்கள்மேல் பல்வேறு வரிகளை திணித்து வருகிறார். கடந்த 2 ஆண்டில் புதுவை சட்டமன்ற கூட்டம் 50 நாட்கள் கூட நடந்தது கிடையாது.கடந்த 2 ஆண்டில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு டீ, சிற்றுண்டி, போக்குவரத்து செலவு என ரூ.3 கோடியே 15 லட்சம் செலவாகி உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது. இதுதான் சிக்கனமா? இந்த செலவினை புதுவை மக்கள் நம்ப தயாராகவில்லை. அமைச்சர்கள் தங்களது வாகனத்துக்கு ரூ.78 லட்சத்தை எரிபொருள் வாங்கியதற்காக செலவிட்டுள்ளனர்.
தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள் வாங்க ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் செலவிட்டுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிக இலவசம் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இவ்வாறு செலவிட்டுள்ளனர்.
தற்போது 20 ஆயிரம் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் போராடி வருகின்றனர். டீ வாங்கிய பணத்தை மிச்சப்படுத்தியிருந்தால் அவர்களுக்கு சம்பளமாவது போட்டிருக்கலாம்.தற்போது வருமானத்தை பெருக்க லாட்டரி சீட்டு விற்பனை முடிவினை அரசு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் பல ஏழ்மையான குடும்பங்கள் பாதிக்கப்படும். இது மக்களுக்கு எதிரானது. எனவே லாட்டரி விற்கும் முடிவினை எதிர்த்து போராடுவோம்.
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு நேரடியாக அரசு மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால் புதுவையில் முதல்–அமைச்சர் மற்றும் சபாநாயகரின் உறவினர்கள் மூலம் விற்க முயற்சி நடக்கிறது. தமிழகத்தைப்போல் மணலை அரசே இறக்குமதி செய்து அரசே விற்பனை செய்யவேண்டும்.
பாகூர் பகுதியில் தனியார் மதுக்கடை கட்ட அரசுத்துறைகள் அனுமதி மறுத்துள்ளன. ஆனால் அதையும் மீறி கட்டுமான பணிகள் நடக்கின்றன. காவல்துறையும் அதற்கு உதவியாக உள்ளது.கிழக்கு கடற்கரை சாலையில் இப்போது எந்த தெருவிளக்கும் எரியவில்லை. பொதுப்பணித்துறையை கேட்டால் விளக்குகளை சரிசெய்ய நிதியில்லை என்கிறார்கள். வீண் செலவுகளை நிறுத்திவிட்டு அரசு இதுபோன்ற விஷயங்களுக்கு நிதியை செலவிடலாம்.இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
dinasuvadu.com