மழுப்பும் விதமாக பதிலளித்துக் கொண்டு இருக்கும் துணைநிலை ஆளுநர்..!!
புதுவையில் நிதி அதிகாரத்தை பரவலாக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுவையில் அரசு நிர்வாகம் செம்மையாகவும், விரைவாக மக்கள் பணிகளை மேற்கொள்ளவும், இயக்குனர், செயலர்கள், நிதியமைச்சர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு நிதி அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையில் நிதி அதிகாரத்தை கூடுதலாக்கி பரவலாக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்பட்டது. அதில் ஆளுநரின் பொது நிதி விதிகள் 13(3)-ல் உள்ள அதிகாரங்களை, தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஞாயிறன்று துணைநிலை ஆளுநர் விடுத்துள்ள வாட்ஸ் அப் செய்தியில், தவறான தகவல் பொதுமக்களுக்கு போய் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதனை தெரிவிக்க விரும்புகிறேன். உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் துணைநிலை ஆளுநரின் நிதி அதிகாரம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நிதி அதிகார விதிகள் 13(3) பின்பற்றுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு கலந்துரையாடல் மட்டுமே. இந்த விதிகளை பின்பற்றியும் செய்யலாம். ஆனால், இது கட்டாயமில்லை. நிதி தொடர்பாக சரியானவற்றை செய்யவும், முறைப்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதில் எங்கே கவர்னர் மாளிகைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது?. அதே நேரத்தில் நிதி தொடர்பான சரியான முடிவுகளுக்கும், தகுதியானவற்றை செய்வதற்கு பொறுப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறேன். நிதி அதிகார பரிசீலனை தொடர்பாக எந்த கோரிக்கையும் அரசிடமிருந்து வரவில்லை. அது வரும்போது அதற்கேற்ப தகுந்த முடிவுகள் எடுக்கப்படும். சட்டப்படி பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் எனக்கு கட்டாயமாக இருக்கிறது. நிதி அதிகாரங்களை பரவலாக்குவதை செய்யலாம் ( கட்டாயமில்லை) ஆனால் அந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என்பது என்னுடைய பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
DINASUVADU