தேங்கிய மழை நீரை ஆய்வு செய்த புதுவை முதல்வர்..!!

Default Image

புதுச்சேரி நகர பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. புதுவையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைபாதிப்பை தடுக்கும் வகையில் புதுவை அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வருவாய் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நேற்று பெய்த மழையினால் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து வியாபாரிகளும், பொதுமக்களும் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் புகார் செய்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து சட்டசபைக்கு புறப்பட்டார். அப்போது அவர் திடீரென காரில் ஏறாமல் லப்போர்த் வீதிக்கு நடந்தே சென்றார். அங்கு சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதை நேரில் கண்டார். இது குறித்து நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், முதல்-அமைச்சர் நாராயணசாமி நகரின் மையப்பகுதியிலேயே இவ்வாறு மழைநீர் தேங்கி இருந்தால் என்ன அர்த்தம்.

இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு கடிந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் ஏறி சின்னவாய்க்கால் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அவர் அங்கிருந்து புறப்பட்டு காரில் ஏறி சென்றார். பின்னர் காந்திவீதி, நேருவீதி, சின்னசுப்புராயப்பிள்ளை வீதி உள்பட நகர் முழுவதும் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியவந்தது. உடனே முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளை அழைத்து உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். மேலும் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பரவாமல் தடுக்க கொசுமருந்து அடிக்கும் படி உத்தரவிட்டார். பின்னர் அவர் சட்டசபை வளாகத்திற்கு சென்றார்.

ஆய்வின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் மழை நிவாரண பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை உடனடியாக அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக சரி செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைபாதிப்பை எதிர்கொள்ள கலெக்டர் தலைமையில் பேரிடர் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ந் தேதி தேதியை விடுமுறை தினமாக அளிப்பதற்கான கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் விடுமுறை அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்