முதுகலை மருத்துவ படிப்புக்கு பூஜ்ஜியம் நீட் கட் ஆஃப்..! எதிர்ப்பு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!
மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெறக் கூறிய பொது நுழைவு தேர்வாகும். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3வது கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3வது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மத்திய அரசின் அறிவிப்பால் நீட் தேர்வு நடத்தப்படுவது அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்று பலரும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனுதாரர் முறையிட்டதை அடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.
இந்த விசாரணையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த அறிவிப்பால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், முதுகலை நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.