முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு Z+ பாதுகாப்பு!
பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு ‘Z’ வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு.
நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்த சமயத்தில், நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டதை அடுத்து சென்ற வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகானுக்கு டெல்லி காவல்துறை Z+ பாதுகாப்பை வழங்கியுள்ளது. இசட் பிளஸ் என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான நபர்களுக்கே ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.