தடுப்பூசி அளிப்பதில் இளைஞர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்!
இந்தியாவில் இளைய தலைமுறையினருக்கு தடுப்பூசி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி போடக்கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்த தடுப்பூசி போடுவதில் முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன் பின்பு 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் பரவியதால் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் தடுப்பூசியில் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கின் தொடர்ச்சியாக, தடுப்பூசி குறித்தும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சங்கி அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள் தான் உயிரிழந்துள்ளனர் எனவும், ஆனால் மத்திய அரசு முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் தங்களுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டு இளைஞர்கள் மட்டுமே வாழவேண்டும், முதியவர்களின் உயிர் முக்கியம் இல்லை என எடுத்துக்கொள்ள வேண்டாம். இருப்பினும் இளைஞர்கள் தான் தற்பொழுது நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டம் வரும் பொழுது நாம் ஒரு குறிப்பிட்ட தரப்பை தேர்வு செய்ய வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள்.
ஆனால் இளைஞர்களுக்கு எதிர்காலம் உள்ளது. எனவே நாம் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் மத்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 15 முதல் 44 வயதுடையவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டு, உங்களிடம் போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லை என்றால் ஏன் அப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாம் தான் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் ஆனால், அவர்களை நாம் திக்கு தெரியா திசைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, மேலும் இத்தாலி அரசு கூட இளைஞர்களுக்கு தான் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை புரிந்து கொள்ளவே முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.