உங்கள் தைரியம் இளம் பெண்களை ஊக்கப்படுத்தும் – குத்துசண்டை வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை நிகாத் ஷரீன் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை ஆவார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக குத்துச்சண்டை போட்டியில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, இந்தியாவிற்கு மிகவும் பெருமை சேர்க்கிறது. வாழ்த்துக்கள் நிகாத் ஷரீன், உங்கள் தைரியம் இளம் பெண்களை ஊக்கப் படுத்தி, தடைகளை உடைத்து அனைத்து விளையாட்டுகளிலும் சாதிக்க தூண்டும் என நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.