இது எங்களுடைய ரத்தம்.! பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவசாயிகள்.!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் ரத்தத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களால் கார்பரேட் நிறுவனங்கள்தான் பலனடைவர், தங்களுக்கு அதனால் பாதிப்புதான் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதுவரை 5 கட்டம் மத்திய அரசுடன், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிட்டவில்லை.
ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என உறுதியளித்தாலும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி போராடி வரும் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர். அதில், இது எங்களுடைய ரத்தம். எங்கள் உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப்பெரிய பாவம். எங்கள் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர் பறிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 65 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஷன் சிங் என்பவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்துள்ள அவரைக் கவனித்த மற்ற விவசாயிகள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.