கோவின் தடுப்பூசிக்கான முன்பதிவு.. நேற்று மட்டும் 80,00,000 பதிவு ..!
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்த்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து, மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதற்காக நேற்று முதல் www.cowin.gov.in/home என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மாலை 4 மணி முதல் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்ய தொடங்கிய சிறிது நேரத்திலே ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ய முயற்சி செய்ததால் கோவின் இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது.
தங்களால் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இருப்பினும், நேற்று 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் 18-44 வயதுக்குட்பட்டவர்கள், அதிலும் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இந்த இடைப்பட்ட 3 மணி நேரத்தில் தான் அதிக முன்பதிவு நடைபெற்றது.
ஒரு மணி நேரத்தில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்டனர். மொத்தம் 79,65,720 பதிவுகள் நேற்று நடந்தன. பெரும்பாலும் 18-44 வயது உடையவர்கள் என கோவின் தலைவர் ஆர்.எஸ். சர்மா கூறினார்.