அபாயக் குறி அளவைக் கடந்த யமுனை நதி நீர்மட்டம்..! மக்களை வெளியேற்றும் பணித் தொடக்கம்..!
யமுனை நதி நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்த நிலையில், மக்களை வெளியேற்றும் பணித் தொடங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் யமுனையில் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாயக் குறி 205.33 மீட்டராகவும் உள்ளது.
முன்னதாக, கனமழை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். யமுனையில் நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்று வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. யமுனா நதியில் நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்தால், ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்குவோம் என கூறியிருந்தார்.
அதன்படி, தற்பொழுது யமுனை நதி நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று காலை 6 மணி நிலவரப்படி பழைய ரயில்வே பாலத்தின் நீர்மட்டம் 206.28 மீட்டராக உயர்ந்ததாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடமேற்கு இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.