முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பாதுகாப்பு..!
பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, வருகின்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மோய்னாப் தொகுதியில் பாஜக சார்பில் அசோக் திண்டா போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டபோது அடையாளம் தெரியாத நபர்களால் அசோக் திண்டா தாக்கப்பட்டார். அவரது கார் குச்சிகள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் டிண்டாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கார் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக டிண்டா ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனது காரும், தானும் செங்கற்களால் தாக்கப்பட்டதாக இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது. இந்நிலையில், அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.