மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவருக்கு, எதிரான போராட்டத்தில் ஈடுபட அனைத்து கட்சிகளையும் பஜ்ரங் புனியா வரவேற்றுள்ளார்.
வரவேற்பு:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி, இங்குள்ள ஜந்தர் மந்தரில் உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் தங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் வரவேற்கப்படுகின்றன என்று கூறினார்.
பாலியல் குற்றச்சாட்டு:
கடந்த ஜனவரி மாதம் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், ரவி தஹியா மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், போராட்டம் நடத்திவந்த நிலையில், WFI தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்படும் என உறுதியளித்த பின்னர் ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கோரிக்கை நிறைவேறவில்லை:
மல்யுத்த வீரர்களின் புகார்களை விசாரிக்க ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. இருப்பினும், ஒரு கோரிக்கையை கூட குழு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
பல உத்தரவாதங்கள் வழங்கப்பட்டு, எதுவும் நிறைவேற்றப்படாததால் பல மாதங்களாக ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாலிக் கூறினார்.
மீண்டும் போராட்டம்:
இதனையடுத்து தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கிய மல்யுத்தவீரர்கள், இம்முறை அரசியல் கட்சியிடமிருந்தும் வரும் ஆதரவையும் மறுக்கப் போவதில்லை என்று மாலிக் மேலும் கூறினார். எங்களுக்கு நீதி கிடைக்காத வரை போராட்டம் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.
மகளிர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய, டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதில் 3 மாதங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்பதால் தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
மேலும் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கக்கோரி, வினேஷ் போகத் தலைமையில் 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவில் காவல்துறை பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளனர்.