உலகளவில் இரண்டாம் இடம் பிடித்த ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உலகளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று, 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றார். இவருடைய இந்த சாதனையை உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் கூட இதுவரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. அதுமட்டுமல்லாமல்,டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனையடுத்து, நீரஜ் சோப்ராவை ஒட்டுமொத்த இந்திய மக்களும், அரசும் பாராட்டியது.குறிப்பாக, ஹரியானா அரசு ரூ.6 கோடியும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், பஞ்சாப் அரசு ரூ.2 கோடி, மணிப்பூர் ரூ.1 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிசிசிஐ தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்தன. மேலும் மகேந்திரா நிறுவனத்தின் காரும், விமானத்தில் ஒரு வருடம் இலவசமாக பயணிக்கும் கோல்டன் பாஸும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பரிசுகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது 14 இடங்கள் முன்னேறி 1,315 புள்ளிகளுடன் இவர் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.