கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி ஊசி செலுத்திக் கொண்ட பெண்கள்…! பின்னணி என்ன …?
உதிப்பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தின், ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த சரோஜ், அனார்கலி, சத்தியவதி ஆகிய மூன்று பெண்களும், அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சுகாதார மையத்தின் முதல் தளத்தில் தான் தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த பெண்கள் மற்றொரு பிரிவுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் அவசர வேலையாக சென்றதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு மற்றொரு நபரிடம் கூறியுள்ளார். அந்த நபர் தவறுதலாக வெறிநாய்கடிக்கான, ரேபீஸ் தடுப்பு ஊசியை செலுத்தி உள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த தவறுக்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்யும்படி தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடக்கிறது என்றும், இதுதொடர்பான அறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.