இனியும் பெண்களை புறக்கணிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்
இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும் அவர் நேற்று மும்பையில் நடந்த பெண் இயக்குனர்கள் மாநாட்டில் கூறியதாவது, நாங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வில்லை, உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் பல நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் வாரியங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குனராவது இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன. இதனால் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பொதுத்துறை வங்கிகள் உட்பட பல நிறுவனங்களில் இன்னும் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், சில நிறுவனங்கள் பெண்களை வாரியத்தின் இயக்குனர் பதவியில் வைப்பது தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் இதற்கான அழுத்தம் தர முடியாது கார்பரேட் நிறுவனங்கள் தான் பெண்களுக்கு முன்னுரிமை தர அழுத்தம் வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது ஆண்களுக்கான வசதியான இடமாக இருக்க விடக்கூடாது, பெண்கள் தான் துணிந்து முன்னேற வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.