கோத்தபாய ராஜபக்சேயின் வெற்றியால் தமிழினத்துக்கு துயரமான நாளாக இந்த நாள் மாறியுள்ளது – வைகோ!
இலங்கையின் 8 வது பிரதமர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றது வருத்தமளிக்கிறது எனவும், இதனால் இந்த நாள் தமிழனத்துக்கு துயரமான நாள் எனவும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் தேர்தலில் ராஜபக்சே அண்ணனாகிய கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றதை அடுத்து, மதிமுக பொது செயலாளர் வைகோ அவரது கருத்தை கூறியுள்ளார். அதாவது, இந்த நாள் தமிழினத்துக்கு துன்பமான நாளாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் விதவைகளைக் கண்ணீரில் தவிக்க விட்டு, எண்ணற்ற இளம் பெண்களை நாசப்படுத்தி, பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், வயதானவர்கள் என்றும் பாராமல் இனப்படுகொலை செய்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைக்குக் காரணமாக இருந்தவர் மகிந்த ராஜபக்சே என்று சொன்னால், அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்து அதை இயக்கியது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே தான்.
கைகளில் தமிழர்களின் ரத்தம் காயமலே உள்ளது, பல தமிழ் மக்கள் சுஜித் பிரம்மதேசவுக்கு தான் வாக்குகள் அளித்திருப்பார்கள். அதே நேரத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தையும், ஏற்பட இருக்கின்ற ஆபத்தையும் எண்ணி தங்களை பாதுகாத்துக்கொள்ள எது நல்லது என்பதைப் பற்றி தீர்மானித்தற்காக இந்த வேதனையான நேரத்திலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
காணாமல் போன இலட்சக்கணக்கான தமிழர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கவில்லை. படுகொலைகளைச் செய்து, கோர நர்த்தனமாடிய கொலைபாதகன்தான் கோத்தபய ராஜபக்சே. எனவே இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்.
சீனத்தோடும், பாகிஸ்தானோடும் உறவாடிக்கொண்டே, இந்தியாவையும் ஏமாற்றி, தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்வதற்கு கொத்தபய ராஜபக்சே துடித்துக்கொண்டுதான் இருப்பார். அதைத் தடுக்க வேண்டிய கடமை உலகத் தமிழினத்துக்கு உண்டு.
தாய்த் தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு உண்டு; தமிழ் இளைஞர்களுக்கு உண்டு.எத்தனையோ அழிவுகளைச் சந்தித்துவிட்டோம். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். அதனால் நாம் அஞ்ச வேண்டியது இல்லை. கவலைப்பட வேண்டியது இல்லை. நம்பிக்கையோடு நம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்கு தொடர்ந்து நம்முடைய கடமைகளைச் செய்வோம் என கூறியுள்ளார் வைகோ.