கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்!
கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான ஊதியத்தை தாமதப்படுத்துவதாகவும் கூறி ஆத்திரமடைந்து தொழிற்சாலையை இரும்பு கம்பிகளால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட 125க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, ஒரு வார காலத்திற்கு தொழிற்சாலை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரையிலும் இந்த தொழிற்சாலை இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர் அவர்கள், இன்னும் 20 நாட்களில் ஐபோன் உற்பத்தி முழுமையாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.