மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
ஆனாலும் பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சியான சிவசேனாவை வீழ்த்தி பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் நாட்டில் பா.ஜனதா வீழ்ச்சி அடைய தொடங்கி இருப்பதை காட்டுகிறது என சிவசேனா கூறியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் கூறி இருப்பதாவது:-
மறைந்த பா.ஜனதா எம்.பி. சிந்தாமன் வாங்காவுக்கு பால்கர் தொகுதியில் அவரது மகன் சீனிவாஸ் வாங்காவை(சிவசேனா வேட்பாளர்) தோற்கடித்ததன் மூலம் பா.ஜனதா நல்லபடியாக மரியாதை செலுத்திவிட்டது. பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி சிவசேனாவை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது. பா.ஜனதாவுக்கு சிவசேனா தான் மிகப்பெரிய அரசியல் எதிரி. பால்கர் தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று சுமார் 100 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறாகி இருப்பதை சுட்டிக்காட்டி, ஓட்டு போடுவதற்கான நேரத்தை அதிகப்படுத்துமாறு சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதேநேரத்தில் பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித்தின் இதுபோன்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் சுமார் 46 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக முதலில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அடுத்த நாள் இது 56 சதவீதம் என கூறப்பட்டது. அதாவது ஒரே நாள் இரவில் சுமார் 82 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகியுள்ளன. பால்கர் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் நாட்டில் பா.ஜனதா வீழ்ச்சி அடைய தொடங்கியிருப்பதை காட்டுகிறது.
இதன் மூலம் நாட்டில் தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக காற்று வீசத்தொடங்கி இருப்பது தெரியவருகிறது. காங்கிரசையோ அல்லது தேவேகவுடாவையோ பிரதமராக தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.