மருத்துவ செலவுக்கான வரி விலக்கு ரூ.20,000 ஆக அதிகரிக்கப்படுமா ?
மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது இருக்கும் ரூ. 5,000 வரையிலான வரி விலக்கை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைதுள்ளனர். மருத்துவ செலவுக்கான வரி விலக்கு பற்றிய அறிவிப்பு நடப்பு பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் நடைமுறை வந்ததில் இருந்து கிடைக்கும் வரி தொகையில் 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கான வருமான வரிச் சலுகையானது இவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே வருமான வரிச்சலுகை பெருமளவு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை பலர் முன் வைத்தனர். அவர்களுக்காகவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில், தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மேலும், வருமான வரிச்சட்டம் 80 D யின் படி ,தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அளிக்கப்பட்டு வரும் வரி விலக்கை ரூ.5,000 இருந்து ரூ,20,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையானது தேசிய அளவில் முக்கியமானதாக தெரிகிறது.ஆனால் அண்மையில் நடந்த நிதித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கான வரி விலக்கை ஆண்டொன்றுக்கு ரூ,10,000 மட்டுமே உயர்த்த முடியும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.