காப்பாற்றப்படுமா லட்சத்தீவு…? லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்….!

Default Image

லட்சத்தீவின் நிர்வாகியான பிரபுல் கோடா படேல் கொண்டுவந்துள்ள புதிய திட்டங்களுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்.

சுற்றுலாவுக்கு பெயர் போன ஒரு இடம் லட்சத்தீவு.  இந்த லட்சத்தீவில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவு தினேஷ்வர் சர்மா என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு காலமானார்.

இதனையடுத்து, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாக உள்ள பிரபுல் கோடா படேல் லட்சத்தீவின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் பாஜக தலைவரான படேல், நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது நிர்வாக நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதாக பல குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இவர் நிர்வாகப் பொறுப்பை எடுத்த நாள் முதல் மலையாளிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் என்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

மேலும், லட்சத்தீவு கப்பல்கள் மற்றும் படகுகள் எதுவும் கேரளாவின் பேய்பூர்  துறைமுகத்திற்கு செல்லக் கூடாது என்றும், அதற்கு பதிலாக கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகம் தான் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்தியாவிலேயே குற்றம் நடக்காத ஒரே பகுதி லட்சத்தீவு தான். ஆனால், அங்கு குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

லட்சத்தீவுகளின் முந்தைய நில உரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே தீவுகளில் நிலம் வாங்க முடியும். ஆனால், இந்த உத்தரவு தளர்த்தப்பட்டு யார் வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்யப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அங்கு வாழும் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும், இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் அப்பகுதியில் மாட்டிறைச்சி என்பது அவர்களது முக்கியமான உணவுகளில் ஒன்று. இதனை தடை விதிப்பதற்கான முயற்சிகள், கடலோர மக்களின் குடில்கள் அகற்றம், மது விலக்கு நீக்கம், லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் களைப்பு போன்ற அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என்ற விசித்திரமான சட்டத்தையும் கொண்டு வந்துள்ளார்.  இவரது இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், லட்சத்தீவில் பாஜகவின் பொதுச் செயலாளர் முகமது காசிம், படேலை ‘சர்வதிகாரி’ என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் லட்சத்தீவில் நடக்கும் அநீதிகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முஸ்லீம் ஆதிக்கம் கொண்ட லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை, தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் நிற்க தடை, நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களை இயற்றுதல். தீவுகளுடன் வலுவான சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்ட கேரளாவுடனான உறவை சிதைத்தல் போன்ற அநீதியான செயல்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இடது சாரி மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமருக்கு தலையீடு கோரி கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகமது காசிம், படேலின் நடவடிக்கைகள் வேலை இழப்பு மற்றும் மக்களை துன்புறுத்துவதற்கு வழிவகுக்கும். அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து இங்குள்ள மற்ற தலைவர்கள் யாருடனும் விவாதிக்கவில்லை. லட்சத்தீவில் பிஜேபி காலடி எடுத்து வைக்க முயற்சிப்பதால், படேலை  ஆதரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவை சேர்ந்த காதர் கூறுகையில், மோடி அரசாங்கத்தின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் லட்சத்தீவில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. படேல் மத்திய அரசால் அனுப்பப்பட்டார். அவர் தீவுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார். லட்சத்தீவில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரசும், இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும், படேலின் சில நடவடிக்கைகள் மக்களால் “பாராட்டப்படவில்லை” என்று காதர் ஒப்புக் கொண்டார். ஒரு முஸ்லீம் ஆதிக்கம் நிறைந்த இடத்தில், மாட்டிறைச்சி தடை செய்ய முடியாது. முன்மொழியப்பட்ட சில நில விதிகளும் நல்லதல்ல. இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்