பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகிறாரா முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து?
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் என தகவல்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் தொடர்வார் என்றும் அவரை மாற்ற காங்கிரஸுக்கு திட்டமில்லை எனவும் தகவல் வெளியாகயுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தார். அதில், தனது பணியையும் தொலைநோக்கு பார்வையையும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது என்றும் மாநிலத்திற்காக யார் உண்மையாக போராடுகிறார் என்பதையும் ஆம் ஆத்மி கட்சி அறிந்து வைத்துள்ளது எனவும் தெவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே, சித்துவுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் மோதல் வெடித்து வருகிறது. இதனிடையே, இந்த பதிவு அவர் கட்சி மாறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.