ஹாட்ரிக் அடிப்பாரா சந்திரசேகர் ராவ்? தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் மும்முனை போட்டி!
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
அதில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெலுங்கனாவில் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிச.3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி வெற்றி சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் அடிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் தற்போது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது அக்கட்சித் தலைவர் கே.சி.ஆர். முதல்வராக இருக்கிறார்.
கடந்த 2014 மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதால் 2014 ஜூன் 2ம் தேதி தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இதில், 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து சந்திரசேகர் ராவ் முதலமைச்சரானார். இந்த சமயத்தில் நவம்பர் 30ம் தேதி 3-ஆவது சட்டமன்ற தேர்தலை தெலுங்கானா மாநிலம் சந்திக்கிறது.
இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா எதிர்கொள்ளும். சந்திரசேகர ராவின் ஆளுமை, 9 ஆண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் பி.ஆர்.எஸ். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்தவர் என்பதால் சந்திரசேகர ராவ் மீதான அதிருப்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி மீதான அதிருப்தியும், சிறும்பான்மையினரின் வாக்குகளும் கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுபோன்று, பிரதமர் மோடியின் பிம்பத்தை மட்டுமே முழுமையாக நம்பி பாஜக களமிறங்கும். இருப்பினும் சமீபத்தில் தெலுங்கானா சென்ற பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இது தேர்தல் நெருங்குவதால் நடைபெறும் வியூகம் எனவும் விமர்சனம் எழுந்தது.
மறுபக்கம். தெலுங்கனாவில் உள்ள 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆகஸ்ட் மாதமே ஆளும் பி.ஆர்.எஸ் அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஏராளமான நிர்வாகிகள் ஆர்வம் காட்டுவதால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கனாவிலும் சிவேற்றி பெற வேண்டும் என முனைப்பில் காங்கிரஸ் களத்தில் இறங்கியுள்ளது.
முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிடாவிட்டாலும் 6 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. திராவிட மாடல் பாணியிலான வாக்குறுதிகள் தெலுங்கானாவில் கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. ஆளும் கட்சியான பிஆர்எஸ்-யின் தேர்தல் அறிக்கை அக்.15ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் யாரை போட்டியிட வைப்பது என்பதில் பாஜக குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இறுதியாக பாஜக தேர்தல் அறிக்கை வெளியாக விபு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் தெலுங்கானாவில் மும்முனை போட்டி போல தோற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் போது பிஆர்எஸ், காங்கிரஸுக்கும் இடையே இருமுனை போட்டியாகவே இருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் மகுடம் சூட்டப்போவது யார் என டிசம்பர் 3ம் தேதி தெளிவாகும் என்பது குறிப்பிடப்படுகிறது.