இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் பங்கேற்பேன்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
மும்பையில் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக கூறியது ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மும்பையில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. காங்கிரஸின் ஆதரவுடன் சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபியின் சரத் பவார் பிரிவு கூட்டாக கூட்டத்தை நடத்துகிறது.