வட இந்தியாவில் நிலநடுக்கம் நீண்ட நேரம் உணரப்பட்டது ஏன்..? விஞ்ஞானி விளக்கம்..
வட இந்தியாவில் நிலநடுக்கம் நீண்ட நேரம் உணரப்பட்டது ஏன்..? என்று நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் விஞ்ஞானி ஜே.எல்.கௌதம் விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் நேற்று இரவு 6.6 ரிக்டர் அளவில் சக்த்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடஇந்திய மாநிலங்களான டெல்லி-என்சிஆர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்த அதிர்வினால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர்.
இந்த அதிர்வு குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் அலுவலகத் தலைவரும் விஞ்ஞானியுமான ஜே.எல்.கௌதம் கூறுகையில், “இந்தோ-ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு இடையேயான டெக்டோனிக் தட்டுகள் யூரேசியா கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு டெக்டோனிக் தட்டுடன் மோதுகிறது. இதனால் இந்து-குஷ்-இமயமலை (HKH) பகுதி அதிகளவு நில அதிர்வு ஏற்படும் பகுதியாக உள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் வடஇந்தியாவில் நீண்ட நேரம் உணரப்பட்டதற்கான காரணம் நிலநடுக்கத்தின் ஆழம் ஆகும். இதன் ஆழம் 150 கிமீக்கு மேல் இருப்பதால் அதிகநேரம் உணரப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம். ஆனால் அவற்றை முன்னறிவிக்க முடியாது. என்று நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் அலுவலகத் தலைவரும் விஞ்ஞானியுமான ஜே.எல்.கௌதம் கூறினார். நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் உருவாக்கிய தானியங்கி அறிக்கையின்படி, 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலிருந்து 133 கிமீ தென்கிழக்கே ஏற்பட்டுள்ளது என்பதும் 156 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.