“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!
திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்படும் நெய்-க்கு ரூ.320 தான் ஒதுக்கப்படுகிறது. அதில் எப்படி சுத்தமான பசு நெய் வாங்க முடியும் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்து இருப்பதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதுடன் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இப்படியான சமயத்தில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திருப்பதி தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் உள்ளதாக வெளியான செய்திகள் வருத்தமளிக்கிறது. இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். திருப்பதி லட்டுவின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
லட்டுவை தயாரிக்க பயன்படும் நெய் ஏன் சுத்தமாக இல்லை என்பதற்கு பல்வேறு கரணங்கள் உள்ளன. உணவு கலப்படம் இல்லாமல் நெய் வாங்குவதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. நெய் வாங்குவதற்கு டெண்டர் விடப்படும். அப்போது ஒரு கிலோ நெய் வாங்க ரூ.320 தான் ஒதுக்கப்படும். அந்த விலையில் எப்படி சுத்தமான பசு நெய் வாங்குவது.? அதற்கு குறைந்த தரத்தில் தான் நெய் கிடைக்கிறது.
அப்படி வாங்கப்பட்ட நெய்களின் மாதிரியை குஜராத்தில் உள்ள NDP ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதில், சோயா பீன்ஸ் எண்ணையில் கலப்படம் நடந்துள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர் டெய்ரி எனும் நிறுவனம் கடந்த ஜூன், ஜூலை மாதம் மட்டும் 4 டேங்கரில் நெய் வந்துள்ளது.
குஜராத் ஆய்வுக்கூடத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. பொதுவாக 100 சதவீத நெய்யில் அதன் தரம் என்பது 99 சதவீதம் பாலின் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வு அறிக்கையில் 100 சதவீதத்தில் 20 சதவீதம் மட்டுமே நெய்யின் தரம் இருந்துள்ளது தெரியவந்தது.
தற்போது அந்த குறிப்பிட்ட நெய் விநியோகிஸ்தரிடம் இருந்து தற்போது நெய் வாங்குவதை நிறுத்திவிட்டோம். நமக்கு சொந்தமாக ஆய்வு கூடம் இருந்தால் தான் நெய் தரத்தை ஆய்வு செய்யமுடியும் என்பதை அறிந்து தற்போது புதிய ஆய்வு கூடம் கட்டியுள்ளோம். அது செயல்பட தொடங்கியுள்ளது. ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கபடும். ” என திருப்பதி லட்டின் தரம் குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் தற்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.