“ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலை?” – பிரதமர் மோடி விளக்கம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை விதிக்க தொடங்கியுள்ளன.
ஆனால்,உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை இந்தியா,சீனா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்தன.குறிப்பாக, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியிருந்தது.
இந்நிலையில்,ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியில் இந்தியா ஏன் நடுநிலை வகிக்கிறது? என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
5 மாநிலங்களில் பாஜக நான்கில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகத்தில் தனது கட்சித் தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார்.அப்போது,ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியில் இந்தியா ஏன் நடுநிலை வகிக்கிறது? என்று பிரதமர் மோடி தனது உரையில் விளக்கினார்.
” அதன்படி,ரஷ்யா -உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போரைத் தீர்க்க அமைதி மற்றும் நிலையான பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா -உக்ரைனுடன் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது.அதன்படி, பொருளாதாரம்,பாதுகாப்பு,கல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும், இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது.ஆனால்,இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது.
ஆனால்,உக்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்ற மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஆபரேசன் கங்கா நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் பிராந்தியமயமாக்க(regionalize) முயற்சிக்கின்றனர்.இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
ஏனெனில்,உக்ரைனில் ஆபரேஷன் கங்காவை செயல்படுத்த வெளியுறவு அமைச்சகம் அதன் ரஷ்ய மொழி பேசும் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அனுப்பியுள்ளது.போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்குள் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவுகளை எடுக்க ஒரு இணைச் செயலாளர் தலைமையிலான சிறப்புக் குழுவும் டெல்லியில் இருந்து சென்றுள்ளனர்.கிட்டத்தட்ட 22,000 இந்தியர்கள்,முக்கியமாக மாணவர்கள், உக்ரைனில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி போன்ற மிகவும் ஆபத்தான நகரங்களில் இருந்து ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்துள்ளார்.