கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி ! இந்தியாவின் முடிவிற்கு WHO வரவேற்பு
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் இந்தியாவின் முடிவை உலக சுகாதார அமைப்பு (WHO) வரவேற்றுள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியது.
ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கும் இந்தியாவின் முடிவை உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.