கேரளாவில் அடுத்த முதல்வர் யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!!
கேரள சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி தொடர்ந்து 2வது வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியீடு.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி 140 இடங்களில் கேரளாவின் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 2.74 கோடி வாக்காளர்களில் 73.58 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதய இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, மற்றும் பாஜக என மும்முணைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. அதில், கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
அதாவது, சிபிஎம் கூட்டணி 72-80, காங்கிரஸ் கூட்டணி 58-64, பாஜக கூட்டணி 1-5 இடங்களை கைப்பற்றும் என்று ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இதுபோன்று, கேரளாவில் 104-120 இடங்களில் வென்று பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது.
ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பில் இடதுசாரி கூட்டணி 104-120. காங்கிரஸ் கூட்டணி 20-36, பாஜக கூட்டணி 0-2 இடங்களை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.