நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் – எந்தெந்த மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.?
நிதி ஆயோக் கூட்டம் : இன்று நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (27ம் தேதி ) 9வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக முதல்வர்களுக்கு பதில் மாநில அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த முறை முதல்வர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநில முதலமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதல்வர் பினரயி விஜயன், ஆகியோரும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி வருகை :
நிதி ஆயோக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், அந்த கூட்டத்தில் பங்கேற்பதாக மம்தா தெரிவித்திருக்கிறார். ஆனால், மேற்கு வங்கம் மீது மத்திய அரசு காட்டும் பாகுபாடு குறித்த தனது எதிர்ப்பை பதிவு செய்யவே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருக்கிறார்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் டெல்லி வருகை :
உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்கள், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
புறக்கணிப்பு – விளக்கம் :-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :
தமிழ்நாட்டிற்காக எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, இந்த முறை திருவள்ளுவரும் கசந்து போய்விட்டார். இவ்வாறு, நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளர்.
முதல்வர் ரங்கசாமி :
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸும் பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.