2025 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? லேட்டஸ்ட் தகவல் இதோ!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி. 13ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட் பொது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, 8வது ஊதிய குழுவை அரசாங்கம் உடனடியாக அறிவித்தது என்றால், வரவிருக்கும் 2025 பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதல் கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13 வரை நடைபெறும், மற்றும் இரண்டாம் கட்டம் மார்ச் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. . கடந்த ஆண்டு ஜனவரி 31, 2024 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கி, பிப்ரவரி 1, 2024 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார் அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அதே தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.