சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? லேட்டஸ்ட் தகவல் இதோ!
CBSE வாரியத் தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : சி.பி.எஸ்.இ வாரியம் எப்போது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என மாணவர்கள் அனைவரும் காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் தொடங்கும் தேதிகள் பற்றிய விவரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வருகின்ற நவம்பர் 28-ஆம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி தியரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதற்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 இல் தொடங்கப்படவுள்ளது.
அதைப்போல, இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, வரை சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. மேலும், அடுத்த ஆண்டும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை 44 லட்சம் மாணவர்கள் எழுதுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே, சி.பி.எஸ்.இ வாரியம் கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12வது தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே அடுத்த ஆண்டுக்கான தேர்வு 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என உறுதிப்படுத்தி இருந்தது. ஆனால், இன்னும் முழுவதுமான அட்டவணையை வெளியிடவில்லை. விரைவில் சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை 2025 வெளியான பிறகு, அது சி.பி.எஸ்.இ இன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இணையத்தளத்தில் வெளியிடப்படும். அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.