“பயனர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் வாட்ஸ்-அப்” -மத்திய அரசு குற்றச்சாட்டு..!
வாட்ஸ்-அப் நிறுவனம் பயனர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து,வாட்ஸ்-அப்பின் புதிய தனிநபர் கொள்கையானது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கும்,விதிகளுக்கும் எதிரானது.எனவே,அந்த கொள்கையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வாட்ஸ்அப் அதன் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைக்கு ‘தந்திரமாக ஒப்புதல்’ பெறுவதன் மூலம் பயனர் எதிர்ப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய பிரமாணப் பத்திரத்தின் மூலம் குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது,வாட்ஸ்-அப் நிறுவனமானது,தனது தனியுரிமைக் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக,தினமும் மக்களுக்கு அறிவிப்புகளை வழங்க அதன் டிஜிட்டல் வலிமையைப் பயன்படுத்துகிறது என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது.
மேலும்,வாட்ஸ்-அப்பின் திருத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கையானது, புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் மத்திய அமைச்சகம் குற்றம் சாட்டியது.
இதுகுறித்து,இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமர்பித்த புதிய பிரமாணப் பத்திரத்தில் கூறியிப்பதாவது:
- பயனர்கள் மீது வாட்ஸ்அப் முன்வைத்துள்ள அறிவிப்புகள்,இந்திய ஐ.டி விதிகளுக்கு எதிரானது.
- எனவே,புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை தொடர்பான ‘புஷ் அறிவிப்புகளை’ பயனர்களுக்கு தினமும் அனுப்பக்கூடாது என்று வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.
- மேலும், இதுபோன்ற அறிவிப்புகள் தினசரி எத்தனை முறை மக்களுக்கு அனுப்பப்படுகின்றன மற்றும் அவற்றின் உரையாடல் வீதத்தை வாட்ஸ்-அப் பதிவு செய்ய வேண்டும்.
- எந்த வகையான முக்கியமான தனிப்பட்ட தரவு சேகரிக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட கொள்கை தவறிவிட்டது” என்று தெரிவித்திருந்தது.
எனவே,வாட்ஸ் -அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை நீக்க வேண்டும் என்றும்,மத்திய அரசின் ஐ.டி விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.