‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?
இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான முக்கியமான கருவியாக, 'சச்செட்' என்ற செயலியை மக்கள் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிரம்மா பற்றியும் பேசினார்.
அங்கு ஒரு கள மருத்துவமனை அமைத்தல், முக்கியமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் போர்வைகள், கூடாரங்கள், தூக்கப் பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை வழங்குதல் போன்ற இந்தியக் குழுவின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார்.
அப்பொழுது, ‘சச்செட்’ (Sachet) என்ற தேசிய பேரிடர் எச்சரிக்கை செயலியைப் பற்றி குறிப்பிட்டார். இயற்கை பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிமுகப்படுத்திய ‘சச்செட்’ என்ற மொபைல் போன் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த செயலி இயற்கை பேரிடரில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க உதவும் என்று அவர் கூறினார்.
‘சச்செட்’ செயலி என்றால் என்ன?
‘சச்செட்’ என்பது இந்தியாவில் உள்ள முதல் மற்றும் ஒரே தேசிய பேரிடர் எச்சரிக்கை செயலி மற்றும் இணையதளமாகும். இது பொது எச்சரிக்கை நெறிமுறை (Common Alerting Protocol – CAP) திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இந்த செயலி, இயற்கை பேரிடர்களின் போது மக்களைப் பாதுகாக்கவும், முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகும்.
இதை இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA – National Disaster Management Authority) உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் பேரிடர்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்புகளுடன் இணைந்து இது செயல்படுகிறது.
‘சச்செட்’ செயலியின் முக்கிய அம்சங்கள்:
- இந்த செயலி, உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப பேரிடர் எச்சரிக்கைகளை உடனடியாக அனுப்புகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் பகுதியில் வெள்ளம் அல்லது புயல் வருவதாக இருந்தால், அதற்கு முன்பே எச்சரிக்கை செய்தி வரும்.
- இந்த செயலி 12 இந்திய மொழிகளில் (தமிழ் உட்பட) பயன்படுத்தப்படலாம். எச்சரிக்கைகளைப் படிக்க முடியாதவர்களுக்கு, ‘ஒலி வாசிப்பு’ (Read-Out Loud) வசதி உள்ளது. இது குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்.
- மேலும், இந்த செயலி, வானிலை அறிக்கை மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தினசரி வானிலை புதுப்பிப்புகளுக்கான முன்னறிவிப்பை வழங்குகிறது.
- ஒவ்வொரு பேரிடருக்கும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த வழிகாட்டுதல்களை இந்த செயலி வழங்குகிறது.
- அவசர உதவி எண்கள் (Helpline Numbers), பேரிடர் பாதித்த பகுதிகளின் தகவல்கள், மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு வசதிகள் ஆகியவை இதில் உள்ளன.
இதை பெறுவது மற்றும் அணுகுவது எப்படி?
‘சச்செட்’ செயலியை ஆண்ட்ராய்டு (Google Play Store) அல்லது iOS (App Store) மொபைல்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு லிங்க் : bit.ly/3Fb3Osz
iOS லிங்க்: apple.co/3ywcV3f
இணையதளம்: sachet.ndma.gov.in
பயன்பாடு: செயலியை நிறுவிய பிறகு, உங்கள் இருப்பிடத்தை அமைத்து, எச்சரிக்கைகளைப் பெறத் தொடங்கலாம். இதற்கு இணைய இணைப்பு தேவை.