ராகுலின் வயநாடு பயணம் திடீர் ரத்து.. காரணம் என்ன?
வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கடும் பாதிப்புக்குள்ளாகிய வயநாடு மலைப் பகுதிக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் செல்ல இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மாவட்டத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வயநாடு முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நானும் பிரியங்காவும் நாளை வயநாடுக்கு வந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நிலைமையைப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நாங்கள் சந்தித்துள்ளோம். நாங்கள் தரையிறங்க முடியாது என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
கூடிய விரைவில் நாங்கள் வயநாடு மக்களுக்குச் செல்வோம் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.