ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் இருப்பது என்ன? முக்கிய விவரங்கள் இதோ…
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவானது தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை ஏற்று மீண்டும் நாடாளுமன்ற அவைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : நாடே எதிர்நோக்கிய முக்கிய மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
மத்திய அரசு
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கோரும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறும் சூழல் மாற்றியமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே தேர்தல் என்று விதிமுறையின் கீழ் மாறும். இதனால் தேர்தல் செலவுகள் குறைக்கப்படும், மக்கள் நல திட்டங்கள் தேர்தல் நடைமுறை விதியால் பாதிக்கப்படாது என மத்திய அரசு கூறி வருகிறது.
பறிபோகும் மாநில சுயஆட்சி?
அதே நேரத்தில், மாநில சுயஆட்சி பறிக்கப்படும். மாநில சட்டமன்றங்களில் ஆயுட்காலம் குறைக்கப்படும், பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு மற்ற சில காரணங்களால் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் சூழலில், ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனால் மக்களவையில் இன்று கடும் எதிர்ப்பு உருவானது.
ஆதரவும் – எதிர்ப்பும்
இறுதியில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவுக்கு 269 பேர் ஆதரவாகவும், 198 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்துள்ளனர். இதனை அடுத்து, நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்த காரணத்தால் இந்த மசோதாவானது தற்போது நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடளுமன்ற கூட்டுக்குழு :
நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பலாமா , வேண்டாமா என்பது குறித்தும் மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 220 உறுப்பினர்கள் ஆதரவும், 149 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தெரிவித்தார்.
சட்ட மசோதா கூறுவதென்ன?
இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்ட பிறகு நடத்தப்படும் மக்களவை தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில், அந்தந்த மாநில சட்டமன்றங்களில் பதவி காலம் என்பது அடுத்த மக்களவை தேர்தல் வரையில் மட்டுமே இருக்கும்.
அடுத்த, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்றால், அதன் பதவி காலம் அடுத்த 2 ஆண்டுகள் மட்டுமே. அதற்கடுத்த மக்களவை தேர்தலில் இருந்து, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
இதற்கேற்றாற்போல இந்திய அரசியலமைப்பு சட்ட தேர்தல் வீதிகளிலும், திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுகளின் கீழ் உள்ள தேர்தல் விதிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் 82வது பிரிவில் கூடுதலாக ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
மக்களவை பதவிக்காலம் 83வது பிரிவு, மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் பிரிவு 172வது பிரிவு, தேர்தல் நடத்துவது மற்றும் அதனை ஒழுங்கு செய்யும் பிரிவு 327 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்படும்.
தற்போது இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அந்த குழு இந்த சட்ட மசோதாவில் மேற்கொண்டு சில பரிந்துரைகளை கூறும். அந்த பரிந்துரைகளோடு மீண்டும் மசோதா மக்களவைக்கு திரும்ப வரும்.
சட்ட மசோதா நிறைவேறுமா?
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமசோதா நிறைவேற 3இல் 2 பங்கு ஆதரவு தேவை.
முதலில் மசோதா அவையில் உறுப்பினர்களின் கவனத்தில் கொண்டுவரப்படும்.
பிறகு, சபையின் கூட்டுக் குழுவில் உறுப்பினர்களின் பரிந்துரைப்படி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
பிறகு 3இல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாடாளுமன்றமக்களவையில் உள்ள 461 வாக்குகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான அதாவது 307 வாக்குகள் தேவை. ஆனால், 269 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். 198 பேர் எதிர்ப்பாக வாக்களித்துள்ளனர். இதனால், தற்போது இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.