நிலவில் தரையிறங்கியதும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவரின் வேலை என்ன.?
சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 18:04 மணி (6.04 மணிக்கு) அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. அந்த வகையில், இன்று நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த லேண்டரில் ஆனது 4 பகுதிகள் உள்ளன. 26 கிலோ எடை கொண்ட ரோவரில் 2 பகுதிகள் உள்ளன.
நிலவில் லேண்டரின் வேலை என்ன.?
ரம்பா-எல்பி (RAMBHA – LP):
இந்த ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர்-லாங்முயர் ஆய்வு (ரம்பா-எல்பி) பகுதியானது, அணுக்களில் இருக்கும் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் மாற்றங்களையும், அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மாவில் உள்ள அடர்த்தி மற்றும் காலப்போக்கில் அதன் மாற்றங்களையும் நேரத்தை பொறுத்து அளவிடுகிறது.
சேஸ்ட் (ChaSTE):
சந்திரராஸ் சர்பேஸ் தெர்மோ பிஸிக்கல் எக்ஸ்பெரிமெண்ட் (சேஸ்ட்) அமைப்பானது, துருவப் பகுதிக்கு அருகில் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள், வெப்பப் பண்புகளின் அளவீடுகளை மேற்கொள்ள உதவுகிறது.
இல்சா (ILSA):
சந்திர நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவியானது, நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், நில விரிசல்கள், மேடுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து கட்டமைப்பை வரையறுப்பதற்கும், அதனை அளவீடுகளை மேற்கொள்ளும்.
எல்ஆர்ஏ (LRA):
லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (எல்ஆர்ஏ) என்பது லேசர் ஒளியைப் பயன்படுத்தி, லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக தீர்மானிக்கவும் மற்றும் அதற்கான தூரத்தை துல்லியமாக கணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது லேசர்களைப் பயன்படுத்தி சந்திர மேற்பரப்பில் சோதனைகளைச் செய்யும். சந்திரன் அமைப்பின் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அமைப்பும் ஆகும்.
நிலவின் மண் மற்றும் பாறையை ஆய்வு செய்யும் ரோவர்:
லேசர் இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS):
ரோவரில் இருக்கும் லேசர் இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் அமைப்பு, தரம் மற்றும் அளவு அடிப்படை பகுப்பாய்வு, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வேதி கலவைகள் அவை உருவாவதற்கானற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யும். நிலவு மேற்பரப்பு பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
ஆல்பா துகள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS):
இந்த அமைப்பானது ஆல்பா துகள்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள, மண் மற்றும் பாறைகளில் அடிப்படை கலவைகளை, அதாவது மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியதும், நிலவை அடைந்துவிட்டதாக தகவலை பூமிக்கு அனுப்பும். பிறகு ரோவர் தனது எஞ்சின்களை இயக்கி, லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் கால் பதிக்கும். இதனையடுத்து, ரோவரில் இருக்கும் கேமரா லேண்டரையும், லேண்டரில் இருக்கும் கேமரா ரோவரையும் புகைப்படம் எடுத்து, பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்த புகைப்படத்தைக் காண உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.