ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை! தற்போதைய நிலை என்ன?
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
விஜயவாடா : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.
ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த விஜயவாடாவில் விடிய விடிய முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார்.
ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு, 32,000க்கும் மேற்பட்டோர் 166 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு இரு மாநில முதலமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திராவின் தற்போதைய நிலை
136 கால்நடைகள் இறப்பு, 1,72,542 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் என ஆந்திர அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 176 நிவாரண முகாம்களில் 41,927 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.