குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்
CAA: மத்திய அரசு, CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு இந்த சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இந்த CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டமாகும்.
Read More – நாடு முழுவதும் CAA குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு
அந்த நாடுகளில் மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும், அதன்படி 2019-இல் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியுரிமைச் சட்டம் 1955-ஐ திருத்தி உள்ளது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CAA சட்டத்தால் யாருக்கு தாக்கம் ஏற்படும்?
இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு CAA சட்டத்தால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆறு சிறுபான்மை பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
CAA இன் கீழ் குடியுரிமை எவ்வாறு வழங்கப்படும்?
குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து எந்தவொரு ஆவணமும் கேட்கப்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Read More – PM Modi : அக்னி- 5 சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவிப்பு ..!
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்?
குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் கணிசமான அளவில் உள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
CAA சட்டத்தில் மூன்று நாடுகள் மட்டும் இடம்பெற காரணம் என்ன?
CAA சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதை கையாள்கிறது, அதாவது, அந்த நாடுகளின் அரசியலமைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆகையால் அந்த நாடுகளில் பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் அதன்மூலம் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
Read More – உ.பி.யில் பேருந்து தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!
NRC என்றால் என்ன?
1951 இல் நிறுவப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), இந்திய குடிமக்களின் அடையாளங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான தரவுத்தளமாக செயல்படுகிறது. NRC மூலமாக 1948 ஜூலை 19-க்குப் பிறகு இந்தியாவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டை விட்டு, வெளியேற்றும் செயல்முறையை மேற்கொள்ள முடியும். முதலில் உச்சநீதிமன்றம் சார்பாக அஸ்ஸாமுக்காக NRC நடைமுறைபடுத்தப்பட்டது. அஸ்ஸாமில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் வங்காளதேசக் குடியேறிகளை, சட்டபூர்வமான இந்தியக் குடிமக்களில் இருந்து பிரித்தறிவதற்காக இந்த பதிவேடு உருவாக்கப்படுகிறது. அதே நேரம் CAA க்கும் NRC க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.