பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர் என்றும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது எனறு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்றைய தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த தாக்குதலில் உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தனியார் ஊடக செய்தி சேனலுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர் என்றும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசியுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் மதுரைச் சேர்ந்த சந்துரு பாதிக்கப்படவில்லை என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டதால் சந்துரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கடவில்லை என்றும், பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் சந்துரு இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலேயே சந்துருவும் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலை கணக்கெடுக்கும் போது, தவறுதலாக சந்துரு பெயர் இடம்பெற்றிருக்கலாம் என தனியார் ஊடக சேனலுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்ட தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த பலசந்துரு என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.