என்னதான் ஆச்சு நம்ம டெல்லிக்கு.? வீதி வீதியாய் சுற்றும் ஸ்ப்ரே வாகனம்.!
காற்று மாசுவை குறைக்க டெல்லியின் பிரதான சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் ஸ்ப்ரே வாகனம் சுற்றி வருகிறது . டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி அளவீடு AQI 307ஆக உள்ளது.
காற்றின் தரம் AQI அளவீட்டின்படி , 0வில் இருந்து 50 வரை நல்லது என்றும், 51லிருந்து 100 வரையில் ஓகே ரகம் என்றும், 101இல் இருந்து 200 வரை சுமார் என்றும், 201 இல் இருந்து 300 வரை மோசமான நிலை என்றும் 301இல் இருந்து 400 வரையில் மிக மோசமான நிலை என்றும் 401இல் இருந்து 500 வரையில் கடுமையாக மோசமடைந்துள்ளது என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி கணக்கிடுகையில், கடந்த வாரம் 201 முதல் 300 AQI என மோசமான நிலை என்றிருந்த டெல்லி காற்றின் தரம் தற்போது மிக மோசமான நிலை என்று மாறியிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி வரவுள்ளதால் அப்போது இன்னும் காற்று மாசு அதிகமாகும் என்பதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லிaaயில் தூசி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க முக்கிய சாலைகளில் தண்ணீரைத் தெளிக்க ஆன்டி-ஸ்மோக் ஸ்ப்ரே வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனம் திலக் மார்க் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுற்றி வருகிறது. தற்போது குளிர் காலநிலை நிலவுவதால், அனைத்து பகுதிகளிலும், பனி மற்றும் மாசு கலந்து டெல்லியை இருள் சூழ்ந்த பகுதியாக மாற்றி வருகிறது.
மாசு அதன் பிடியை இறுக்குகிறது. நகரத்தின் காற்றின் தரம் மிகவும் மோசமானது என்ற பிரிவில் உள்ளது, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது குறைந்துள்ளது என்றாலும் டெல்லி காற்றின் தரம் மோசமாகி கொண்டே செல்கிறது அங்குள்ள மக்களுக்கு பல்வேறு சுவாச பிரச்சனைகளை உண்டாக்குகிறது.