அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன?
அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியது போலவே, ராஜஸ்தானில் நேற்று ஒரு காவலர் இளைஞர் ஒருவரின் கழுத்தின் மேல் தனது முட்டியை வைத்து சில வினாடிகள் அழுத்தினார். தற்பொழுது அந்த வீடியோ, வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், அந்த போராட்டத்திற்கு பல தரப்பின மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதே போல ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்புர் மாவட்டத்தில் முகேஷ் குமார் என்ற இளைஞர், முகக்கவசம் அணியாமல் நேற்று சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை கவனித்த அங்குள்ள காவலர்கள், முகேஷிடம் “ஏன் மாஸ்க் போடவில்லை” என கேட்டனர்.
அந்தசமயம் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென காவலர் ஒருவர் முகேஷின் கழுத்தின் மேல் தனது முட்டியை வைத்து சில வினாடிகள் அழுத்தினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் அதனை படம்பிடித்தனர். தற்பொழுது அந்த வீடியோ, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#GeorgeFloyd moment for Congress In Jodhpur,Rajasthan police place their knee on the neck of a man pic.twitter.com/qXCGEDua54
— Kumar Gaurav (@kumar623123) June 5, 2020
இந்தச்சம்பவம் குறித்து விளக்கமளித்த ஜோத்புர் கமிஷ்னர் சந்த்ரா கூறுகையில், “முகேஷ்குமார் காவலர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். அதுமட்டுமின்றி, காவலர்களின் கண்களை குத்திவிடுவதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, காவலர்கள் ஜீப்பை வரவழைத்து அவரை எற்ற முயன்றுள்ளார். அப்பொழுது அவர் காவலர்களை தாக்க தொடங்கினார்.
இந்நிலையில், தற்காப்பிற்காகவே அவரை பிடிக்கவேண்டியதாகி விட்டது. தாங்கள் தாக்கப்படமால் இருப்பதற்காகவே காவலர்கள் இப்படி செய்ததாகவும், இப்படி நடப்பது வாடிக்கையானதே” என அவர் தெரிவித்தார். மேலும், “சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்குவது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிப்பதற்கு சமம்” எனவும் தெரிவித்தார்.