இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?
இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வைரஸ் HMPV என்றால் என்ன? அறிகுறிகள், தடுப்பு குறிப்புகள் பற்றி அறிந்து கொளுங்கள்.
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவியது. அதே போல தற்போது Influ A, HMPV வைரஸ்கள் அங்கு பரவுகின்றன.
இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை ICMR உறுதி செய்துள்ளது.
சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் உறுதியாகியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் திருப்பமாக தாய்க்கும், சேய்க்கும் வெளிநாட்டு தொடர்பு இல்லை. இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு எப்படி பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
HMPV என்றால் என்ன?
சீனாவில் வேகமாக பரவும் Human Metapneumovirus (HMPV) சாதாரண, சளி காய்ச்சல், மூச்சு திணறல் அறிகுறிகளையே இந்த வைரஸ் கொண்டிருக்கிறது. அதேநேரம், தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா, ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் தோற்று போன்ற நோய்களை கொண்டு வரலாம்.
அறிகுறிகள் பல நாள்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலானோருக்கு பெரிய தாக்கம் இல்லாமல் இந்த நோய் குணமாகிவிடுகிறது.
2001ல் கண்டறியப்பட்ட இந்த வைரசுக்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ இல்லை. சில பரிந்துரைகள் முன் எச்சரிக்கையாக வழங்கப்படுகிறது. காய்ச்சல் சளிக்கான மருத்துவம் எடுப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல், ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
யாரை பாதிக்கும்?
இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த HMPV தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறது.
தடுப்பு வழிமுறைகள்
- பரவலைக் கட்டுப்படுத்த சோப்பு தண்ணீரில் குறைந்தது 20 வினாடிகளுக்கு கைகளை கழுவவும்.
- இருமல் அல்லது தும்மலின் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்.
- முகமூடி அணியவும், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும்.
- கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களது அறையில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.