என்ன ஒரு போட்டி!! அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்
மேற்கு வங்கத்தில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பல்வேறு சுற்றுகளை கடந்த வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 206 இடங்களிலும், பாஜக 83 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 1, மற்றவை 2 என முன்னிலை வகித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜகவை நுழைய விடமாட்டேன் என மம்தா பானர்ஜி சவால் விட்டிருந்த நிலையில், தற்போது உள்ள முன்னிலைப்படி, தொடர்ந்து 3வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல்வேறு தடைகளை கடந்து ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தவுள்ளார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெரும்பாலான இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், என்ன ஒரு போட்டி, மேற்கு வங்க தேர்தலில் அபார வெற்றிபெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations @MamataOfficial didi for landslide victory. What a fight!
Congratulations to the people of WB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021