பிரதமருக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மாநிலத்தில் கொரோனாவின் நிலைமை தொடர்பான செயல் திட்டம் குறித்துப் பேசப் போவதாக அறிவித்திருந்தார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலவச நோய்த்தடுப்பு மற்றும் போதுமான தடுப்பூசி விநியோகத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். போதுமான தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி ஆகியவற்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த மாதம் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பூசியின் விலை உயர்வு சந்தையில், நேர்மையற்ற வழிமுறைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை குறித்து எழுதியுள்ள அவர், ஒரு நாளைக்கு 220 மெட்ரிக் டன் முதல் 400 மெட்ரிக் டன் வரை ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இது அடுத்த ஏழு நாட்களில் ஒரு நாளைக்கு 500 மெட்ரிக் டன் வரை அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார். எனவே மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தொகையில் ஒரு நாளைக்கு குறைந்தது 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்தாயிரம் டோஸ் ரெம்டேசிவிர் மருந்துகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடிதம் குறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மக்களுக்கு உதவுவது தொடர்பாக எழுதியுள்ளதாகவும், வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை தொடர்பான எந்த சம்பவமும் பொறுத்து கொள்ளப்படாது. பாஜக பழைய சம்பவங்களை புதிய சம்பவங்களாக காட்டுகிறது. யாராவது குற்றவாளி என்றால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.