வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தான் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியின் வெற்றியை அம்மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பலர் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு பின்பு மேற்கு வங்கத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சில தொண்டர்கள் உயிரிழந்த நிலையில் இந்த கலவரம் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னான கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கலவரத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும், அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் சாஞ்சுக்த மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த பாகுபாடுமின்றி அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இந்த இரண்டு லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.