மம்தாவின் டிஎம்சியை வரவேற்கிறேன்.., பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு தயார்! – திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிகே பிஸ்வாஸ்!
திரிபுராவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன் என்று திரிபுரா காங்கிரஸ் தலைவர் பி.கே பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
மம்தாவின் முயற்சி தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் திரிபுராவின் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ், திரிபுராவில் பானர்ஜியின் டிஎம்சி மீண்டும் வருவதை வரவேற்றுள்ளார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல், இங்கு பாஜக ஆட்சிக்கு எதிராக டிஎம்சி ஆதிக்கம் செலுத்த முடியாது என கூறினார்.
மேலும், திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்றும் காங்கிரஸ் தலைவராக (திரிபுராவில்) தோல்வியை உறுதி செய்ய பாஜக எதிர்ப்பு கட்சிகளும் ஒன்றிணைவதை நான் வரவேற்கிறேன் என குறிப்பிட்டார்.
பாஜகவை தோற்கடிக்க மக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். 2024-இல் பாஜக ஆட்சிக்கு வராது. ஆனால், யார் தலைமை வகிப்பது? இந்த கட்சிகள் அனைத்தும் உண்மையாக இருந்தால் பாஜகவின் தோல்விக்கான கூட்டணிக்கு வரவேற்பதற்கு எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
திரிபுராவில் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 40 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக குறைந்தது குறித்து பேசிய அவர், அப்போது கட்சித் தலைவர், எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து மூத்த தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தபோது கட்சியின் நிலை இதுதான் என குறிப்பிட்டார்.
2018-ல் காங்கிரசில் இருந்து ஒரு பெரிய படை பாஜகவில் இணைந்தது. ஆனால், இப்போது டிஎம்சிக்கு இதுபோன்ற ஒரு சம்பவத்தை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதுவரை டிஎம்சிக்கு இங்கு எந்த உள்கட்டமைப்பும் இல்லை, தொகுதி குழு இல்லை, மாநில குழு இல்லை, மாநில தலைவர் இல்லை என தெரிவித்தார்.
பாஜகவிற்கு ஒரு அமைப்பு இருந்தது, ஆனால் அவர்களால் எந்த தேர்தலிலும் இரண்டு சதவீத வாக்குகளை தாண்ட முடியவில்லை. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களுடன் பெரும்பாலான தொண்டர்கள் பாஜகவில் இணைந்ததால், நிலைமை இதுபோன்று உள்ளது. ஆனால், அது TMC உடன் நடக்காது.
முன்பு கூட TMC இங்கு முயற்சித்தது, ஆனால் தோல்வியடைந்தது என்று கூறினார். மேலும், காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில், டிஎம்சி உண்மையுள்ளவர்களாகவும், உண்மையில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பினால், நான் அதை வரவேற்கிறேன் எனவும் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.