மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கமாட்டோம் – அமெரிக்க நிறுவனங்கள் கைவிரிப்பு !
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்தை அணுகியுள்ளன.
பஞ்சாப் மாநில அரசு கொரோனா தடுப்பூசியான மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டது. இதில் மாடர்னா, ஃபைசர் தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க எங்களது கொள்கை அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கோ அல்லது தனியார்களுக்கோ தடுப்பூசி குறித்த தொடர்பை வைத்துக்கொள்ள எங்கள் நிறுவனம் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எங்கள் நிறுவனம் நேரடியாக இந்தியாவின் மத்திய அரசை மட்டுமே தொடர்பு கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், மாடர்னா, ஃபைசர் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் கைவிரித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் முடிவால் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்கள் சற்று கலக்கமடைந்துள்ளது.