பலமுறை எச்சரித்தோம்!ஒரு நடவடிக்கையும் இல்லை!!தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்
- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை.
- பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை .1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்தது .அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் தெரிவித்தது.இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றது.பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் 3 முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் எப்.16 ரக விமானமும் பதில் தாக்குதலுக்கு புறப்பட்டது.ஆனால் இந்திய விமானப்படை பலத்தை அறிந்த உடன் பாககிஸ்தான் போர் விமானங்கள் பின் வாங்கியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மற்றுமொரு தற்கொலை படை தாக்குதல் தடுக்கவே இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது .பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பால கோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று தெரிவித்தார்.
ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது