எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை! உ.பி-யில் காங்கிரஸ் நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள்!

பாலியல் தொந்தரவு கொடுத்த உத்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள்.
உத்திரபிரதேசத்தில், ஜலான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாக இருப்பவர் அனுஜ் மிஸ்ரா. இவரை இரண்டு பெண்கள் செருப்பால் அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அனுஜ் மிஸ்ராவை தாக்கியது மாயா மற்றும் வர்ஷா என்ற இரு பெண்கள் என்பது தெரியவந்தது. அனுஜ் மிஸ்ரா குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், இவர் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், செல்போனில் ஆபாசமாகி பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், அனுஜ் மிஸ்ராவை தாக்கிய பெண்கள் கூறுகையில், அவர் எங்களை தொடர்ந்து வந்து துன்புறுத்தினார். மேலும் எங்களிடம் ஆபாசமாகவும் பேசினார். இதுகுறித்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய்குமார் லல்லுவிடம் புகார் அளித்தோம். அவர் அவர்களது கட்சியினர் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலிஸாரிடமும் புகார் அளித்தோம் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவரை பொதுவெளியில் வைத்து பயங்கரமாக தாக்க வேண்டும் என முடிவெடுத்தோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என கூறியுள்ளனர்.