வயநாடு நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.!
கேரளா : வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80-க்கும் மேற்பட்ட உயிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 400 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். இந்திய ராணுவம், என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் பிற அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கை பேரிடர் காரணமாக ஏராளமான உயிர்கள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்ததற்கு அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. ஜூலை 30 (இன்று ) மற்றும் 31, 2024 அன்று மாநிலத்தில் அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில், மாநிலம் முழுவதும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும். திட்டமிடப்பட்ட பொது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.